பழனி முருகன் கோவில் அதிகாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

பழனி முருகன் கோவில் அதிகாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

Update: 2021-05-28 19:28 GMT
திண்டுக்கல்: 
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. தொற்றுக்கு பலியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். அதன்படி, கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 64 வயது முன்னாள் ராணுவ வீரர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், நத்தம் பகுதியை சேர்ந்த 81 வயது மூதாட்டி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். 
இதேபோல் பழனி முருகன் கோவில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பணன் (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கருப்பணன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 98 பெண்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட மேலும் 413 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 378 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் தற்போது 3 ஆயிரத்து 451 பேர் சிகிச்சையில் உள்ளனர். முன்னதாக கொரோனாவுக்கு பலியான முன்னாள் ராணுவ வீரரின் உடலை த.மு.மு.க.வினர் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்