தமிழ் பெயர்கள் கொண்ட நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
அருப்புக்கோட்டை அருகே தமிழ் பெயர்களை கொண்ட நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே தமிழ் பெயர்களை கொண்ட நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நினைவுக்கல்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் நாகம்பட்டியில் ஈரக்கஞ்சம்மாள் கோவிலில் கண்டறியப்பட்ட நாயக்கர் கால நினைவுக்கல்லில் ஆணின் உருவமானது கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளது.
தலையில் தலைப்பாகை அணிந்தும், காதிலும், கழுத்திலும் அணிகலன்கள் அணிந்தும், இரு புஜங்களிலும் தோல் வளையங்கள் அணிந்தும், இடுப்பில் கத்தி சொருகியவாறும், பட்ைடயானது கால்கள் வரை புனைந்தும், கால்களில் வீரக்கழல் சூடிய அமைப்பில் அமைந்துள்ளது. இந்த ஆண் சிற்பத்திற்கு வலது மற்றும் இடது பக்கத்தில் வணங்கிய நிலையில் இரு பெண்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு
இந்த இரு பெண்களின் தலை முடியானது அள்ளி முடிய பட்டு இவருக்குமே இடது பக்கத்தில் கொண்டையானது போடப்பட்டுள்ளது.
இருபெண்களும் கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவுடி போன்ற ஆபரணங்கள் அணியப்பட்டு, இடது புஜங்களில் தோல் வளையம் அணிந்தும், கால்களில் மடந்தை எனப்படும் சிலம்பு அணிந்த வாரும், அந்தப்பெண்களின் இடுப்பிலிருந்து கால்கள் வரை பட்டாடை அணிந்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களின் மேலே கூடு என்ற கட்டிடக்கலைகூறு காட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டில் உள்ள கல்வெட்டில் இடம்பெற்ற வாசகமானது:-
மாதவ பேருக்கிடி என்ற ஊரில் இருக்கும் குஞ்சுனான் என்பவரின் மகன் சின்னமனான் நினைவாக இந்த நினைவுகல் செதுக்கப்பட்டுள்ளது.
கோவில் திருப்பணி
இந்த நினைவுகல்லின் எழுத்து அமைதி மற்றும் சிலைகளில் காணப்படும் ஆடை வடிவமைப்பு, அணிகலன்கள் ஆகியவற்றை கொண்டு இந்த நினைவுகல்லானது நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கல்வெட்டில் தமிழ் பெயர்கள் கொண்டதாக உள்ளது.
கோவில் திருப்பணி மேற்கொள்ளும்போது துர்மரணம் அடைந்ததால் அந்த நினைவுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. இந்த நினைவுக்கல்லை அந்த பகுதியில் உள்ள மக்கள் குலதெய்வமாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.