சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதல்; 2 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
மதுரையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி நான்குவழிச்சாலை விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சரக்கு ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச் சாலையின் மையத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த வைய்யணப்பெருமாள் (வயது 33) மற்றும் கிளீனர் முத்துராஜ் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் காய்கறிகள் அனைத்தும் சாலைகளில் சிதறிக்கிடந்தன. விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் கிளீனரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.