குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ரத்து
குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொடர் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன.
குன்னூர்,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். அப்போது உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடத்தப்படும். அப்போது குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதற்கிடையில் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேவையான நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, கோடை விழா ரத்து செய்யப்பட்டது. மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். 23 வகைகளை கொண்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவற்றை ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கொரோனா பரவலின் வேகம் தமிழகத்தில் அதிகரித்தது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் இந்த ஆண்டும் கோடை விழா நடைபெறாததோடு பழக்கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லாமல் போனது. தற்போது வெயில் அல்லது தொடர் மழை என மாறி மாறி வரும் காலநிலையால் அந்த மலர்கள் அழுகி வருகின்றன. இதனால் பூங்காவே களையிழந்து காணப்படுகிறது.