அடுக்கம்பாறையில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை உடலை தந்தையே எரித்தது அம்பலம்
அடுக்கம்பாறையில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை உடலை, தந்தையே எரித்தது தெரியவந்துள்ளது.
அடுக்கம்பாறை-
கருகி நிலையில் குழந்தை உடல்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் எதிரில் கடந்த 24-ந் தேதி உடல் கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 2 நாட்களுக்குள் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து, ஆஸ்பத்திரியில் பிறந்து இறந்த குழந்தகளின் பட்டியலை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் எரிந்த நிலையில் கிடைத்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை யார் என்பது தெரியவந்தது.
தந்தையே எரித்தது அப்லம்
அவர்கள் வேலூர், தொரப்பாடியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜோதி- சுவாதி தம்பதி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இவர்களது பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தனியாக வசித்து வந்த நிலையில் சுவாதி கர்ப்பமானார். 7 மாத கர்ப்பமாக இருந்தபோது பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு சரியான மூளை வளர்ச்சி இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2-ந்் தேதி சுவாதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 23-ந் தேதி இரவு இறந்த நிலையிலேயே பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து குழந்தை உடல் தந்தை ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
காதல் திருமணம்
காதல் திருமணம் செய்த தங்களை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் குழந்தை உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல மனமில்லாத ஜோதி, அன்று நள்ளிரவு குழந்தையின் உடலை சாலையோரம் போட்டு அட்டைப்பெட்டி, வைக்கோல் போன்றவற்றால் எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து போலீசார் ஜோதிக்கு அறிவுரை கூறி மீண்டும் அவரிடம் குழந்தையின் உடலை ஒப்படைத்தனர். அவர் குழந்தையின் உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தார்.