வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 395 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-28 15:36 GMT
வேலூர்-

395 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போராடி வருகிறது. எனினும் பரவல் மக்களிடையே அதிகமாக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சுமார் 36 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினந்தோறும் வெளியிடப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் வேலூர் மாவட்டத்தில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் பாதிப்பு 700-யை தாண்டியது. நேற்று முன்தினம் 438 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடும் போது நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

தடுப்பூசி

ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்பாடி தாலுகாவில் நேற்று 92 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 45 பேரும், கிராமப்பகுதியில் 39 பேரும், பேரூராட்சி பகுதியில் 8 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

8 பேர் பலி

இந்த நிலையில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. வேலூர் அரசு மருத்துவமனையில் 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று ஒரேநாளில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மூச்சுத்திணறால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்