மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் விவரம்
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 1ந்தேதி முதல் 11ந்தேதி வரை முக்கியமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளன.
மதுரை,மே
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை முக்கியமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளன.
முக்கிய வழக்குகள் விசாரணை
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்போது முழு ஊரடங்கின் காரணமாக ஐகோர்ட்டுகளில் முக்கியமான வழக்குகளை மட்டும் விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பணியாற்றும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
டிவிஷன் பெஞ்ச்
வருகிற 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மதுரை ஐகோர்ட்டு முதல் டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆனந்தி ஆகியோர் பொது நல வழக்குகள் மற்றும் அப்பீல் உள்ளிட்ட டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் ரிட் மனுக்களை விசாரிக்கின்றனர். 2-வது டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், தாரணி ஆகியோர் அனைத்து கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். தனி கோர்ட்டில் நீதிபதி நிஷாபானு, அனைத்து ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார். சிவில் வழக்குகள், முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரிக்கிறார். முன்ஜாமீன் மனுக்கள் தவிர மற்ற கிரிமினல் வழக்குகளை நீதிபதி நக்கீரன் விசாரிக்கிறார்.
தனி நீதிபதிகள்
இதேபோல வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 2 டிவிஷன் பெஞ்சுகளிலும் அதே நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் தனி கோர்ட்டுகளில் அனைத்து ரிட் மனுக்களையும் நீதிபதி ஆதிகேசவலு விசாரிக்கிறார். முன்ஜாமீன் மனுக்கள் மற்றும் அனைத்து சிவில் வழக்குகளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கிறார்.
முன்ஜாமீன் மனுக்களை தவிர மற்ற கிரிமினல் வழக்குகளை நீதிபதி சந்திரசேகரன் விசாரிக்கிறார். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் உத்தரவுகள், தீர்ப்புகளை நீதிபதிகள் சிறப்பு அமர்வின் மூலம் பிறப்பிப்பார்கள் என ஐகோர்ட்டு பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.