முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பலம் எனக்கு இல்லை: மந்திரி சி.பி.யோகேஷ்வர் பேட்டி

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பலம் எனக்கு இல்லை என்று மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

Update: 2021-05-28 02:16 GMT

முயற்சி செய்யவில்லை

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் சிலர் முயற்சி செய்வதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பகிரங்கமாக கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவை நீக்கும் முயற்சியில் சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் ஈடுபட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தான் அடிக்கடி டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு தனிப்பட்ட வேலைகள் இருந்ததால் நான் டெல்லி சென்று வந்தேன். நான் அடிக்கடி டெல்லி செல்கிறேன். எனது பிரச்சினைகளை மேலிட தலைவர்களிடம் கூறி அவற்றுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறேன். நான் முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற முயற்சி செய்யவில்லை. அவரை மாற்றும் பலம் எனக்கு இல்லை.

அனுமதிக்க மாட்டேன்

சில விஷயங்களை பகிரங்கமாக கூற முடியாது. அதை கட்சி கூட்டத்தில் பேசுவோம். எனது துறையில் அடுத்தவர்களின் தலையீட்டை சகித்து கொள்ள மாட்டேன். எனது துறையில் எனது மகனை அதிகாரம் செலுத்த அனுமதிக்க மாட்டேன். நானும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை செய்து வருகிறேன்.

தற்போது ஆட்சியில் நடக்கும் சில நிகழ்வுகள் சரி இல்லை. இதை முதல்-மந்திரியிடமே கூறியுள்ளேன். என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இது பா.ஜனதா ஆட்சி அல்ல. 3 கட்சிகளின் கூட்டு ஆட்சி. மூன்று கட்சிகளும் ரகசியமாக பேசி செயல்படுகிறார்கள். இது சரியல்ல.

இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்