சென்னையில் போலீசார் நடவடிக்கை: தளர்வில்லா ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு; 1,947 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில், தளர்வில்லா முழு ஊரடங்கை மீறியதாக நேற்று போலீசார் 3 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்தனர். 1,947 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-28 00:53 GMT
போலீசார் நடவடிக்கை
கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையொட்டி, மளிகை-காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டு இருக்கிறது.அதேவேளை அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வழக்குகள் பதிவுசெய்யப்பட்டும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

வழக்குகள் பதிவு
சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, இ-பதிவு பெறாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,885 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், இலகுரக வாகனங்கள் உள்பட மொத்தம் 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல சட்டம் 
ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,542 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனங்கள் பறிமுதல்
அந்தவகையில் சென்னையில் நேற்றுமுன்தினம் மட்டுமே 3 ஆயிரத்து 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,947 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,074 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 223 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்