எடப்பாடி, மேச்சேரி பகுதியில் 1,650 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
1,650 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
இளம்பிள்ளை:
எடப்பாடி, மேச்சேரி பகுதியில் 1,650 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதே போல கருமந்துறையில் 3 பேரல்களில் இருந்த ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
சாராய விற்பனை
தமிழகத்தில் ெகாரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி அருகே உள்ள தங்காயூர் கிராமம் கோனமோரிமேடு அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள ஓடை பகுதியில் சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டுள்ளதாக கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், பிராங்கிளின் உட்ரோ வில்சன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 9 பேரல்களில் போடப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராயம் ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டிருந்த நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேச்சேரி
மேச்சேரி அருகே காமநாயக்கன்பட்டி பகுதியில் ஒருவர் வீட்டின் அருகில் சாராய ஊறல் போட்டிருப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனைநடத்தினர்.
அப்போது காளியப்பன் (வயது 70) என்பவரின் வீட்டின் அருகில் 150 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அதனை அழித்தனர். மேலும் சாராய ஊறல் போட்டது தொடர்பாக காளியப்பனை போலீசார் கைது செய்தனர்.
கருமந்துறை
இதே போல கருமந்துறை, கல்ராயன் வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் மணிகண்டன்,பாஸ்கர் ஆகியோர் கருமந்துறையில் உள்ள பெரியகல்ராயன் பிரிவு, கரியகோவில் பீட், பாச்சாடு மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஏதுவாக 3 பேரல்களில் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வனத்துறையினர் அழித்தனர்.
..........