வேப்பூர் அருகே லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு இடையே கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது

வேப்பூர் அருகே லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு இடையே கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-27 20:05 GMT
வேப்பூர், 

வாகன சோதனை

கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்டுரோடு அருகே சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுஉச்சிமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன்(வயது 43), முருகேசன் மகன் உதயகுமார் (29), கோவிந்தசாமி மகன் துரை(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. அப்போது அவர்கள் பெங்களூருவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள்

இருப்பினும் சந்தேகம் தீராத போலீசார், லாரியில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது வெங்காய மூட்டைகளுக்கு இடையே, 18 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
இதையடுத்து வெங்காய மூட்டைகளுக்கு இடையே மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக மணிகண்டன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்