ஆட்டோவில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த டிரைவருக்கு ரூ.200 அபராதம்
ஆட்டோவில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்வதாக எச்சரிக்கையும் விடுத்தனர்.
தஞ்சாவூர்:
ஆட்டோவில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்வதாக எச்சரிக்கையும் விடுத்தனர்.
கர்ப்பிணி பெண்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழ வீதியை சேர்ந்தவர் சங்கர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பினார். இவருடைய மனைவி சத்யா(வயது 35). கர்ப்பிணியான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டரிடம் காண்பித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று டாக்டரை பார்ப்பதற்காக சத்யா தனது கணவர் சங்கருடன் ஆட்டோவில் தஞ்சைக்கு வந்தார். அந்த ஆட்டோவை கோவிந்தராஜ் ஓட்டி வந்தார். தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது சங்கர் தாங்கள் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி தான் வைத்து இருந்த ஆவணங்களை காண்பித்தார். இதையடுத்து ஆட்டோவை செல்லுமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த ஆட்டோ தஞ்சை கரந்தை அருகில் உள்ள போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த சத்யா, தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறி உள்ளார். சத்யாவின் கணவர் சங்கர் தான் வைத்திருந்த ஆவணங்களை காட்டியுள்ளார்.
ரூ.200 அபராதம் விதிப்பு
ஆனால் அதனை கண்டுகொள்ளாத போலீசார், முககவசம் சரியாக அணியவில்லை என கூறி ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜுக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர்.
அபராதம் கட்டவில்லை என்றால் ஆட்டோவை பறிமுதல் செய்து விடுவதாகவும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி சங்கர் ரூ.200 அபராதத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னரே ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்ல போலீசார் அனுமதித்து உள்ளனர்.
முக கவசம் அணிந்திருந்தும் அபராதம் விதிப்பு
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் கூறுகையில், நானும், ஆட்டோவில் இருந்த மற்றவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தோம். ஆனாலும் முக கவசம் அணியவில்லை என்று கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். கர்ப்பிணி பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும்போது போலீசார் இவ்வாறு நடந்து கொண்டால் இனிமேல் யாராவது மருத்துவமனைக்கு கூப்பிட்டால் நாங்கள் எப்படி செல்வது? என்றார்.