2 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
லாலாபேட்டை அருகே 2 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாலாபேட்டை
பத்திரகாளியம்மன் கோவில்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கண்ணமுத்தம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்து கோவிலை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் ஒரு சிறுவன் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒரு கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.
பணம் திருட்டு
இதுகுறித்து அந்த சிறுவன் ஊர்நாட்டாமை பெருமாளிடம் கூறினான். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது தான் இந்த உண்டியல் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதும், அதனை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கரூரில் இருந்து கைரேகை நிருபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
முத்தாளம்மன் கோவில்
இதேபோல் கண்ணமுத்தம்பட்டி கிராமத்தின் அருகே கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் முத்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு மரத்தடியில் கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் லாலாாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இ்ந்த திருட்டு சம்பவம் குறித்து முத்தமிழ்செல்வன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.