கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் வால்பாறையில் 2035 பேருக்கு தடுப்பூசி

வால்பாறையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதுடன், நேற்று ஒரே நாளில் 2,035 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-05-27 17:54 GMT
வால்பாறை

வால்பாறையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதுடன், நேற்று ஒரே நாளில் 2,035 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் 76 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இங்கு கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இங்கு இதுவரை 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 11 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது முழு ஊரடங்கு என்பதால் வெளியூரில் இருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 

மேலும் இங்குள்ள வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

சிறப்பு முகாம் 

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இங்கு இதுவரை 5,300 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தடுப்புசி முகாம் நடந்தது. 

இதில் வால்பாறை நகர்ப்பகுதியை சேர்ந்த 18 வயது முதல் 44 வயதானவர்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

2,035 பேருக்கு தடுப்பூசி 

அதுபோன்று வால்பாறையை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாம் மூலம் வால்பாறை பகுதியில்  2,035 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் வால்பாறை தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி தலைமையில் போலீசாரும் தீவிர கண் காணிப்பு மற்றும் வாகன சோதனையும் மேற்கொண்டு வருகிறார்கள். 

இதில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

நெகமம் பகுதி 

நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நாட்களாக தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 200 டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து தடுப்பூசி போடப்பட்டது. எனவே பலர் அங்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் ஒரே நாளில் தடுப்பூசி காலியானது. முதற்கட்டமாக போட்டவர்கள், 2-வது கட்ட தவணை போட முடியாமல் பலர் திரும்பி சென்றனர்.  

மேலும் செய்திகள்