மன அழுத்தத்தை போக்க மூச்சு பயிற்சி அவசியம் யோகா டாக்டர் அர்ச்சனா விழிப்புணர்வு

மன அழுத்தத்தை போக்க மூச்சு பயிற்சி அவசியம் என்று தூய்மை பணியாளர்களுக்கு யோகா டாக்டர் அர்ச்சனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-05-27 17:50 GMT
பொள்ளாச்சி

மன அழுத்தத்தை போக்க மூச்சு பயிற்சி அவசியம் என்று தூய்மை பணியாளர்களுக்கு யோகா டாக்டர் அர்ச்சனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

யோகா பயிற்சி

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார். 

அரசு ஆஸ்பத்திரி யோகா டாக்டர் அர்ச்சனா தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதை தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகை பொடி வழங்கப்பட்டது.

இதில் நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில், சிவக்குமார், செல்வம், ஜெயபாரதி, யோகா மையத்தின் உதவியாளர்கள் தங்கதுரை, ஷாலினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக யோகா டாக்டர் அர்ச்சனா பேசும்போது கூறியதாவது:-

மூச்சு பயிற்சி

கொரோனா பாதிப்பிற்கு இடையில் நீங்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உங்களுக்கு பல வகையில் மன அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்திற்கு மூச்சு பயிற்சி அவசியமானது. 

அமைதி யாக, மனதை ஒருநிலைப்படுத்தி மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவை சீராக வைத்து கொள்ள மூச்சு பயிற்சி முக்கியமானதாகும்.

சளி தொந்தரவு இருந்தால் நீராவி மூலம் ஆவி பிடிக்க வேண்டும். யோகா மூலம் மனதையும், உடலையும் சமநிலையில் வைத்திருக்க முடியும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோயை சரி செய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 

மேலும் பச்சை காய்கறிகள், பழங்கள், முளைவிட்ட தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்