குமரியில் மழை சேதத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு காணப்படும்

குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, குமரி மாவட்டத்தில் மழை சேதத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-27 17:49 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, குமரி மாவட்டத்தில் மழை சேதத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பார்வையிட்டார்
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
பின்னர் அவரும், அமைச்சர் மனோ தங்கராஜூம் சேர்ந்து மழை வெள்ள சேத பாதிப்புகளை நேரில் சென்று  ஆய்வு செய்தனர். அப்போது உடைப்பு ஏற்பட்ட தேரூர் குளம், நாகர்கோவில் புத்தேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட புத்தேரி குளம், புத்தேரி நெடுங்குளத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருப்பதிசாரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2 விதமாக ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து அதற்குரிய அறிக்கையை உடனடியாக தர வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 பகுதியை ஆய்வு செய்தோம். 2 இடங்களில் மழை வெள்ளம் குளத்தின் கரையை உடைத்து, மறுகால் பாய்ந்துள்ளது. அந்த பகுதிகளில் அதற்குரிய பாலங்கள் அமைக்கப்படாததால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிற இடங்களையும் ஆய்வு செய்தோம். நாளையும் (அதாவது இன்று) ஆய்வு செய்ய இருக்கிறோம்.
பலத்த மழையால் எந்தெந்த இடங்களில், எந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது? வீடு இடிந்ததற்கு எவ்வளவு நஷ்டஈடு வழங்க வேண்டும்? ஆறு, குளம் உடைப்பால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்? என்பது குறித்தும், இதேபோல் மீண்டும் மழை வந்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் 2 விதமாக நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறோம்.
முதல்-அமைச்சரிடம் அறிக்கை
ஆய்வு கூட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு என்ன செய்வது? மேலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன  நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்து பேசி அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சரிடம் கொடுக்க இருக்கிறேன்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய மாவட்டமாகும். எனவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை இந்த அரசு நிச்சயம் மேற்கொள்ளும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசை பொறுத்தவரையில் நிதி ஒரு பிரச்சினையே இல்லை. தேவைப்பட்டால் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு தயாராக இருக்கிறோம். எனவே குமரி மாவட்டத்துக்கு தேவையான நிதி நிச்சயமாக வரும். இந்த மாவட்டத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்திற்கு தேவையான நிதியை முதல் அமைச்சரிடம் பேசி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். நாளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு குமரி மாவட்டத்தின் சேத விவரம் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த மழையால் தமிழகத்தில் குமரி மாவட்டத்தைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
கலெக்டர் அரவிந்த்
ஆய்வின் போது கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார், வேளாண்மை துறை இணை இயக்குனர் சத்யஜோஸ், நாகர்கோவில் கோட்டாட்சியர் (பொறுப்பு) சொர்ண ராஜ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்