மதுபாட்டில்கள் விற்ற மெக்கானிக் கைது
மதுபாட்டில்கள் விற்ற மெக்கானிக் கைது
கோவை
மதுக்கரையில் ஆன்லைன் மூலம் மதுபாட்டில்கள் விற்ற மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மதுக்கடைகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் பூட்டிக் கிடக்கிறது.
மேலும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருவோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுக்கரை மரப்பாலம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே மரப்பாலம் ராஜேஸ்வரிநகர் பகுதியில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்து மதுபாட்டில்கள் விற்ற நபரை மடக்கி பிடித்தனர்.
மெக்கானிக் கைது
விசாரணையில் அவர், மதுக்கரையை சேர்ந்த மெக்கானிக் ரகுநாத் (வயது 41) என்பதும், இரு சக்கர வாகன ஒர்க் ஷாப் வைத்திருப்பதும், ஆன்லைன் மூலம் தகவல் அனுப்பி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருத்து 106 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.