ஊட்டி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் பள்ளிக்கு கொரோனா தடுப்பூசி மையம் மாற்றம்

ஊட்டி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் பள்ளிக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி மையம் மாற்றப்பட்டது.

Update: 2021-05-27 17:46 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதற்காக தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் ஆங்காங்கே தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

அதேபோல் ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இங்கு கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். முதல், 2-வது டோஸ் செலுத்த கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் 2 இடங்களில் தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு கொரோனா தடுப்பூசி போடும் மையம் மாற்றப்பட்டது. இங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

 ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லும் படி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருந்தனர். ஒருமுறைக்கு 20 பேர் என்ற முறையில் அனுமதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது,
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்த கூட்டம் கூடுவதால் தடுப்பூசி போடும் முகாம் தனியார் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

 நீலகிரிக்கு நேற்று காலையில் 1,200 கொரோனா தடுப்பூசி வந்தது. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேல் தடுப்பூசி சென்னையில் இருந்து வரவழைக்கப்படுகிறது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்