உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையி்ல் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-27 17:00 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், மருந்துகள் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரங்களை அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் இதர முன் களப்பணியாளர்களுக்கு முக கவசங்கள், கிருமி நாசினிகள், பழங்கள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை தடுக்க முழு மூச்சாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

தற்போது உள்ள சூழலில் தடுப்பூசி தான் மிகவும் முக்கியம். எனவே தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஏ.ஜே. மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க.நிர்வாகிகள் சம்சாத், ஆசீர்வாதம், பாலாஜி, கலியமூர்த்தி, சர்தார் கான், அமுதா மணிமேகலை, கல்யாணி ,பிரகாஷ், தண்டபாணி, மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்