கொரோனா நோயாளிகள் மாத்திரைகள் கிடைக்காமல் பரிதவிப்பு

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் மாத்திரைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2021-05-27 16:33 GMT
தேனி:

நோயாளிகள் தவிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 34 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 705 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை வீடு தேடிச் சென்று தினமும் பரிசோதனை நடத்தவும், அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், சானிடைசர், முககவசம் ஆகியவை அடங்கிய மருந்து பெட்டகங்களை வழங்கவும் அரசு உத்தரவிட்டது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக மருந்து பெட்டகம் போதிய அளவில் இருப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது.

மருந்து கடைகளுக்கு படையெடுப்பு

தினமும் 500-க்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருந்து பெட்டகம் கிடைக்காமல் வீடுகளில் நோயாளிகள் நோயின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் தவித்து வருகின்றனர். இதனால், பலரும் தங்களுக்கு தெரிந்த டாக்டர்களை தொடர்பு கொண்டு மருந்து மாத்திரைகளை கேட்டு, மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்கின்றனர். 

சிலர், நேரடியாக மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சல், சளி மாத்திரை, மருந்துகளை வாங்கிச் சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களே நேரடியாக மருந்து கடைகளுக்கு படையெடுப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மருந்து பெட்டகம் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மருந்து பெட்டகங்கள் கிடைக்கும். அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மருந்து உதவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

மேலும் செய்திகள்