முழு ஊரடங்கை மீறிய 975 பேர் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 975 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 50,688 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் என்ற சங்கிலித்தொடரை அறுப்பதற்காக கடந்த 24-ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மருத்துவ தேவை உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையின்றி யாரேனும் சுற்றித்திரிகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியில் மாவட்டம் முழுவதும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலிலும் சிலர் கட்டுக்கடங்காமல் வீட்டை விட்டு வெளியேறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி வருகிறார்கள். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முழு ஊரடங்கை மீறியதாக விழுப்புரம் மாவட்டத்தில் 975 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களது வாகனங்களான 928 இருசக்கர வாகனங்கள், 24 கார்கள், 23 ஆட்டோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.
ரூ.1 கோடி அபராதம் வசூல்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுகிற வகையில் செயல்படும் நபர்களை போலீசார், பொது சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தனித்தனியாக கண்காணித்து வந்ததோடு முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக விலகலை பின்பற்றாதது போன்ற அரசின் கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதுவரை மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் சென்றவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக காவல்துறை சார்பில் 27,334 பேரிடம் இருந்து ரூ.55 லட்சத்து 19 ஆயிரமும், வருவாய்த்துறை சார்பில் 3,996 பேரிடம் இருந்து ரூ12 லட்சத்து 48 ஆயிரமும், சுகாதாரத்துறை சார்பில் 9,986 பேரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 20 ஆயிரத்து 400-ம், நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 9,372 பேரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 34 ஆயிரமும் ஆக மொத்தம் 50,688 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்து 21 ஆயிரத்து 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
எனவே அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.