விளாத்திகுளம் பெண் போலீஸ் குடும்பத்துக்கு ரூ.7½ லட்சம் நிதயுதவி
விளாத்திகுளம் பெண் போலீஸ் குடும்பத்துக்கு ரூ.7½ லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டது
கோவில்பட்டி:
விளாத்திகுளம் அருகே உள்ள மேல் கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ். முத்துலட்சுமி கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பெண் குழந்தை பிறந்ததும் அவர் இறந்தார். அந்த குழந்தையுடன், ஏற்கனவே கவிஸ்னா (வயது 5) என்று மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. இறந்த முத்துலட்சுமி 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தவர். இந்த ஆண்டில் பணியில் சேர்ந்த 13ஆயிரம் போலீசார் இணைந்து உதவிக்கரம் குழு உருவாக்கியுள்ளனர். இந்த குழுவினர், சக போலீஸ்காரர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் முத்துலட்சுமி குடும்பத்திற்கு இந்த குழுவினர் ரூ.7½ லட்சம் வசூலித்தனர். அந்த நிதியை முத்துலட்சுமி குடும்பத்தினரிடம் போலீஸ் உதவிக்கரம் குழுவினர் வழங்கினர். மேலும், கடந்த ஆண்டு உயிரிழந்த சேலம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தலா ஒரு போலீஸ்காரர் குடும்பத்திற்கும் இக்குழுவினர் நிதியுதவி வழங்கினர்.