கோவில்பட்டி தற்காலிக மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவில்பட்டி தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2021-05-27 14:35 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி,  தற்காலிக மார்க்கெட்டிற்கு வியாபாரிகளை தவிர்த்து அத்துமீறி வந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு பயந்து பொதுமக்கள் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவியது.
வாகனங்கள் மூலம்  காய்கறி விற்பனை
கோவில்பட்டி நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் மக்களுக்கு அத்தியாவசிய பொருகள் கிடைக்கும் வகையில் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கு சென்றே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி பகுதியில் 60 வாகனங்கள் மற்றும் ஊராட்சி பகுதியில் 100 வாகனங்கள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி 
இந்த வானங்களுக்கு தேவையான காய்கறிகள் விற்பனை செய்ய கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக தினசரி சந்தையில் உள்ள மொத்த வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. சில்லரை விற்பனை செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது. 
ஊரடங்கு விதிமீறல்
ஆனால் சிலர் ஊரடங்கு விதிகளை மீறி சில்லரை விற்பனை செய்ய தொடங்கியதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வர தொடங்கி யதால் மார்கெட்டில் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் பொது மக்கள் பலர் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வர தொடங்கி யதால் தினசரி மார்க்கெட்டில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டன. சில்லரை விற்பனை செய்யக் கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். 
கொரோனா பரிசோதனை
ஆனாலும் பொதுமக்கள் வருகை குறைந்தபாடில்லை. கொரோனா தொற்று பரவும் அபாயமும் நீடித்தது. இதை கட்டுப்படுத்த நகராட்சி, காவல்துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் தற்காலிக தினசரி மார்க்கெட் வாயிலில் முகாமிட்டு, சந்தைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். கொரோனா பரிசோதனை என்றதும் காய்கறி வாங்க வந்த பலரும் அலறி அடித்துக் கொண்டு  ஓட ஆரம்பித் தனர். சிலர் தற்காலிக சந்தையின் பின் பகுதியில் இருக்கும் கம்பி வேலியை தாண்டி ஓட ஆரம்பித் தனர். சிலர் தங்களது வாகனங்களை விட்டு விட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
25 வாகனங்கள் பறிமுதல்
இருந்த போதிலும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே தினசரி சந்தையில் இருந்து வாகன ஓட்டிகள், வியாபாரிகள் செல்ல அனுமதித் தனர். மக்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள தாகவும், தினமும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப் படும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நேற்று பொதுமக்கள் விட்டு சென்ற 25 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்