வாய்மேடு, தலைஞாயிறு பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்
வாய்மேடு, தலைஞாயிறு பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா 2-வது அலை பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி திவிரம் அடைந்துள்ளது. அதன்படி தலைஞாயிறு, ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி போடப்படுகிறது.
நேற்று ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள் சுந்தர்ராஜன், வெங்கடேஷ், பரத் ஆகியோரை கொண்ட குழுவினர் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். இதில் ஆயக்காரன்புலம், பன்னாள் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர். முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைராசு முன்னிலை வகித்தார். வக்கீல்கள் பாரிபாலன், அன்பரசு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளி, ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார். இதில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.