கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
கம்பம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு, முதல் அலையின்போது நகர்ப்பகுதியில் வசிக்கிற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் கிராமப்புறங்களில் அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது 2-வது அலையின் தாக்கம் கிராமப்புறத்திலும் அதிகரித்துள்ளது.
இதைக்கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் கொரோனா குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி ஏதேனும் உள்ளதா? என பொதுமக்களிடம் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி (கிராம ஊராட்சி) ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாரும் வந்து செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாராயணத்தேவன்பட்டியில் கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை தடுப்புகள் மூலம் சுகாதாரத்துறையினர் அடைத்தனர்.
------