ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஓலைச்சுவடிகளை கணினியில் பதிவேற்றும் பணி தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஓலைச்சுவடிகளை கணினியில் பதிவேற்றும் பணி தொடங்கியது.

Update: 2021-05-26 19:29 GMT
ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஓலைச்சுவடிகளை கணினியில் பதிவேற்றும் பணி தொடங்கியது.

அருங்காட்சியகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருங்காட்சியகத்தில் அந்தக்கோவில் மட்டுமின்றி, அதன் உபகோவில்களான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில், அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், அன்பில் மாரியம்மன் கோவில், திருவெள்ளறை புண்டரிகாட்ச பெருமாள் கோவில் ஆகியவற்றின் ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளையும், கோவில் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் உரிமை, ஆவணங்களையும் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும், கோவில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் கணினி வழியாக பார்வையிடும் வகையில், புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

ஓலைச்சுவடிகள்

அதன்பேரில், ஸ்ரீரங்கம் கோவில் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் கேமராவில் ஒளிப்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதுபற்றி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அதன், உப கோவில்கள் ஆகியவற்றின் அனைத்து சொத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனிடையே கோவிலில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை கேமராவில் ஒளிப்பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று (நேற்று) தொடங்கியது. சுந்தரகாண்டம், பாகவதம், ஸ்ரீபாகவதம், பெரியாழ்வார் திருமொழி, வியாக்கியானம், துலா காவிரி புராணம் ஆகிய 5 தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் தலா சுமார் 250 ஓலைச்சுவடிகள் 6 கட்டுகளாக உள்ளன.

ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை பழங்காலத் தமிழ் எழுத்துகளாலும், சில தெலுங்கு மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகள் மிகவும் பழமையானவை என்பதால், அவை சேதமடைந்துவிடாமல் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்