பறிக்காமல் செடியிலேயே விடப்பட்ட பூக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஊரடங்கினால் விலைவீழ்ச்சி ஏற்பட்டதால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டு விட்டனர்.

Update: 2021-05-26 18:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஊரடங்கினால் விலைவீழ்ச்சி ஏற்பட்டதால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டு விட்டனர்.  
பூக்கள் சாகுபடி 
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பிள்ளையார்நத்தம், பூவாணி, மீனாட்சிபுரம், தொட்டியபட்டி, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற ஏக்கரில் விவசாயிகள் கோழிக்கொண்டை, செவ்வந்திப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர். 
இந்த பூக்கள் தற்போது நன்கு பூத்து விற்பனைக்கு தயாராக உள்ளன. இருப்பினும் தற்போது முழு ஊரடங்கு என்பதாலும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் பூக்களை பறிக்காமல் விவசாயிகள் செடியில் அப்படியே விட்டு விட்டனர். 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 
இதனால் கடைகள் மூடப்பட்டன. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே கோவில்கள் மூடப்பட்டன. கொேரானா விதிமுறைகளை பின்பற்றி திருமணமும் எளிய முறையில் நடக்கிறது. இதனால் பூக்களின் விலையும், விற்பனையும் ெவகுவாக குறைந்து விட்டது. 
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மற்ற பூக்களின் விலையும் குறைந்துள்ளது. 
நிவாரணம் 
பிள்ளையார்நத்தம், பூவாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு என்பதாலும், விலை இல்லாததாலும் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு  விட்டனர். 
கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்