நாமக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்திருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘சீல்’
நாமக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்திருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்:
சூப்பர் மார்க்கெட்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம் தவிர அனைத்து கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் நகரில் கடந்த 24-ந் தேதி முதல் அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி யாராவது கடைகளை திறந்து வியாபாரம் செய்கிறார்களா? என போலீசார் நாமக்கல் நகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
2 பேர் மீது வழக்கு
இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது கடையின் பின்புறம் திறந்து இருந்தது. மேலும், கடையின் முன்புறத்தில் முட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக நாமக்கல் போலீசார் கடையின் உரிமையாளர் முருகன், காவலாளி ராஜூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.