காய்கறி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

கோைவயில் காய்கறிகள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர்.

Update: 2021-05-26 18:15 GMT
கோவை

கோைவயில் காய்கறிகள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும்  காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர்.

நடமாடும் காய்கறி வாகனங்கள்

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 70 வாகனங்கள் மற்றும் அனுமதி பெற்ற தனியார் வாகனங்கள் உள்பட 520 வாகனங்கள் மூலம் மாநகர பகுதியில் உள்ள 100 வார்டுகளில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாகனங்களில் கொண்டு வரும் காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். 

ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினாலும், சில இடங்களில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

நீண்ட வரிசை

இந்நிலையில் கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்கறி வாங்குவதற்காக அப்பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். 

இந்த காய்கறிகளை வாங்குவதற்கு முதியவர்களும் நீண்டநேரம் காத்திருப்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதுபோன்று எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிலும் இதே நிலைதான் நீடித்தது. 

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், காய்கறிகள் வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் 

இதற்கிடையே  ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி அனுமதி பெற்ற தனியார் வாகனங்களில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. 

தக்காளி கிலோ ரூ.40-க்குதான் விற்க வேண்டும். ஆனால் அதை ரூ.60-க்கும், ரூ.40-க்கு விற்க வேண்டிய புடலங்காய் ரூ.80-க்கும்,, கத்தரி ரூ.60-க்கும், ரூ.5-க்கு விற்க வேண்டிய கறிவேப்பிலையை ரூ.10-க்கும் விற்றதாக கூறப்படுகிறது.

 மேலும் பல வாகனங்களில் விலை பட்டியலும் ஒட்டப்படவில்லை எனறும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

 நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்