கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி மும்முரம்
முழு ஊரடங்கிலும் நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி,
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தோட்டங்களில் பறித்த பச்சை தேயிலையை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று, தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
தேயிலையை தொடர்ந்து 10 நாட்கள் பறிக்காமல் விட்டால் இலைகள் முற்றி போய்விடும். தொடர்ந்து பறித்தால் மட்டுமே பராமரிப்பு பணியை மேற்கொள்ள முடியும். தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் சமூக இடைவெளிவிட்டு தேயிலை பறிக்க வேண்டும்.
அவர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முககவசங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தொற்று பரவலை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகளில் உற்பத்தி நடந்து வருகின்றன.
நீலகிரியில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், பெரிய தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. சில சிறிய தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தேயிலை கொண்டு வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருப்பு வைக்கப்பட்ட தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டதால், தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை பறிக்கும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.