தாந்தோணிமலையில் பயன்பாடின்றி கிடக்கும் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடம்
தாந்தோணிமலையில் பயன்பாடின்றி கிடக்கும் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடத்தை உடனடியாக புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
கரூரில் இருந்து -வெள்ளியணை செல்லும் சாலையில் உள்ள தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் கல்லூரியில் இருந்து சற்று தூரத்தில் கருங்கற்களால் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் அந்த கட்டிடம் கல்லூரி விடுதியாக மாற்றப்பட்டு அங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கல்லூரி விடுதி கட்டிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமாக மாற்றப்பட்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது.
பயன்பாடின்றி கிடக்கிறது
பின்னர் கலெக்டர் அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த திட்ட வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அங்கு மாற்றப்பட்டது. இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் தற்போது கருங்கற்களால் கட்டப்பட்ட பழைய கட்டிடம் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டு கிடக்கிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் கட்டிடத்தின் பல இடங்கள் தேசம் அடைந்து அதன் கான்கீரிட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் முட்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே இந்த கட்டிடத்தை சீர் செய்து புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.