ஒரு நாள் பாதிப்பு 1500ஐ கடந்து மதுரையில் புதிய உச்சம்
மதுரையில் ஒரு நாள் பாதிப்பு முதன்முறையாக 1500-ஐ கடந்து, நேற்று ஒரே நாளில் 1538 பேர் பாதிக்கப்பட்டனர். 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுரை, மே.
மதுரையில் ஒரு நாள் பாதிப்பு முதன்முறையாக 1500-ஐ கடந்து, நேற்று ஒரே நாளில் 1538 பேர் பாதிக்கப்பட்டனர். 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மதுரையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 1,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 9647 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 1538 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூடியதால் இந்த பாதிப்பு உயர்ந்ததாக மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இன்றும், நாளையும் இதே போன்று பாதிப்பு உயரக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 50 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து, 60 ஆயிரத்து 74 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 473 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 15 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று புதிதாக 9 முதியவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழந்தவர்கள் 48, 54, 39, 53 வயது ஆண்கள், 76, 65, 80, 64, 62, 66, 81, 72, 80 வயது முதியவர்கள், 59 வயது பெண், 73 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது.
10 தினங்களில்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் “மதுரையில் 2-வது அலையில் மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் நேற்று வரை 384 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிலும் கடந்த 10 தினங்களில் மட்டும் 166 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.