கொரோனா விதிமுறையை மீறிய ஆவின் பாலகத்துக்கு சீல்
தஞ்சையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி ஆவின் பாலகத்தின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்து, சீல் வைத்து மூடினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் என்.ராஜகுமாரி. இவர் தஞ்சை சாந்தபிள்ளைகேட் அருகே ஆவின் பாலகத்தை நடத்தி வந்தார்.
இந்த பாலகத்தில் தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு முரணாக வடை, பஜ்ஜி, முறுக்கு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கொரோனா ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாக பாலகத்தை நடத்தி வந்ததாகவும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்புக்கு மின்னஞ்சல் மூலம் சமூகஆர்வலர் ஒருவர் புகார் அனுப்பினார்.
அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆவின் நிர்வாகிகளுக்கு தமிழகஅரசின் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஆவின் பொதுமேலாளர் ஜெய்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆவின் பாலகத்தின் முகவர், ஒப்பந்த விதிகளை மீறி தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாலகம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜகுமாரிக்கு வழங்கப்பட்ட ஆவின் பாலகத்தின் உரிமத்தை ஆவின் அதிகாரிகள் ரத்து செய்ததுடன் ஆவின் பாலகத்துக்கு சீல் வைத்தனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு முழு ஊரடங்கை மீறி செயல்பட்டதாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இதே ஆவின் பாலகத்துக்கு சீல் வைத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.