சொந்த மாநிலத்துக்கு திரும்பும் பீகார் தொழிலாளர்கள்
ஊரடங்கால் வேலையை இழந்ததால் பீகார் மாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்கின்றனர்.
திண்டுக்கல்:
வெளிமாநில தொழிலாளர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், ஓட்டல்கள், வெல்டிங் லேத் பட்டறைகள், இரும்பு கடைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
இதுதவிர பானிப்பூரி, போர்வை, பஞ்சு மிட்டாய் விற்பனையிலும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இதில் பீகார், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்த வகையில் மாவட்டம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. அதையடுத்து சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி சென்றனர்.
அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் வேலைக்கு வந்தனர்.
ஊரடங்கால் வேலையிழப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் கொரோனாவின் 2-வது அலை பரவ தொடங்கியது.
இதையடுத்து கடந்த 10-ந்தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் 24-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அமலில் இருக்கிறது.
மேலும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், இரும்பு கடைகள், லேத் பட்டறைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
அதோடு சாலையோர கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் பானிப்பூரி, போர்வை, பஞ்சு மிட்டாய் ஆகியவற்றை விற்பனை செய்யமுடியவில்லை.
இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
இதற்கிடையே ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை.
இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே, கொரோனா குறையும் வரை சொந்த ஊரில் இருக்க முடிவு செய்து, திரும்பி செல்கின்றனர்.
பீகாருக்கு புறப்பட்டனர்
அதன்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். ஆனால், திண்டுக்கல்லில் இருந்து பீகாருக்கு ரெயில் சேவை இல்லை.
இதனால் திருச்சி அல்லது சென்னைக்கு சென்று அங்கிருந்து சொந்த மாநிலத்துக்கு செல்லும்படி ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பீகார் தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்து குருவாயூர் ரெயிலில் ஏறி திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.