காரில் கடத்தி தொழிலாளி கொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் கைது
கபிஸ்தலம் அருகே காரில் கடத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி புதுத் தெருவை சேர்ந்தவர் பாலன் (வயது50). கூலித்தொழிலாளி. கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பாலன், அதே ஊரில் வசிக்கும் சந்திரகாசன் (70) என்பவரிடம் பணம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே இருந்து வந்த முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்த நிலையில் பாலன் ஈச்சங்குடி பகுதியில் வசிக்காமல் தனது மாமியார் வீடு உள்ள சுந்தரபெருமாள்கோவிலில் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி பாலன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம்-திருவையாறு சாலையில் உமையாள்புரம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது சந்திரகாசன் மகன் விஜி என்கிற ராஜதுரை(32), அவருடைய தாய் மாமன் ராஜி, அவரது நண்பர் சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வினோத்(31) ஆகிய 3 பேரும் பாலனை வழிமறித்து கட்டையால் தாக்கி, காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து பாலனின் மகன் பாபு கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி திருவையாறு அருகே உள்ள திங்களூர் ஓடைக்கரையில் பாலன் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய விஜி என்கிற ராஜதுரை, ராஜதுரையின் தாயார் சாந்தி(54), மனைவி மங்கையர்கரசி(27),் அக்கா கோமதி(35), சென்னையை சேர்ந்த வினோத், வேளாங்கண்ணியை சேர்ந்த மரியதாஸ் (30), கணேசன்(26), ராமன்(30) ஆகிய 8 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜதுரையின் தாய்மாமன் ராஜி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.