ஊரடங்கு விதிமுறையை மீறியதாக ஒரே நாளில் 352 வழக்குகள் பதிவு - போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் பேட்டி

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக ஒரே நாளில் 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் கூறினார்.

Update: 2021-05-26 15:16 GMT
தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகரில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் கூலி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க மாவட்ட போலீஸ்துறை முடிவு செய்தது.

அதன்படி முதல்கட்டமாக தஞ்சை ஏ.ஒய்.ஏ. நாடார் தெருவில், ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் கூலி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போலீஸ்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் இருந்தவர்களை வெளியே வரச் சொல்லி அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு சோதனைக்கு பிறகு அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அனுமதி இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். நேற்று (அதாவது நேற்றுமுன்தினம்) ஒரு நாளில் மட்டும் 312 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் என 316 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு விதிமுறையை மீறியதாக 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி விற்பனை வண்டிகள் தடைப்படாமல், அனைத்து இடங்களுக்கும் சென்று வர போலீசார் முழு ஒத்துழைப்பு அளித்து கண்காணித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கால், வேலையிழந்து தவிக்கும் கூலித் தொழிலாளிகள் குடும்பத்தினருக்கு, தனியார் அமைப்புடன் இணைந்து அவர்களுக்கு தேவையான மளிகை, காய்கறி பொருட்களை போலீசார் சார்பில் வழங்கி வருகிறோம். இதற்காக 500 குடும்பங்களை தேர்வு செய்து வழங்கி வருகிறோம்.

அதில் ஒரு குடும்பத்திற்கு 15 நாட்களுக்கு தேவையான 20 பொருட்கள் உள்ளன. தஞ்சையில் ஊரடங்கு விதிமுறையை மீறி திறந்திருந்த 2 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை நடத்தும் போது, பொதுமக்கள் வேறு வழியாக சென்று வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில், மாற்று வழிகளை தடுப்பு வைத்து அடைத்து விட்டு, முக்கிய சாலைகளில் வாகன சோதனை செய்த பிறகு அனுமதிப்படுகின்றன. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் தாமதம் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்