திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அம்மா உணவகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண் ஊழியர்கள் தீக்குளிக்கப்போவதாக கூறியதால் வேதாரண்யத்தில் பரபரப்பு

வேதாரண்யம் அம்மா உணவகத்தில் 3 பெண் ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நேற்று அம்மா உணவகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-26 15:16 GMT
வேதாரண்யம்:-

வேதாரண்யம் அம்மா உணவகத்தில் 3 பெண் ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நேற்று அம்மா உணவகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெண் ஊழியர்கள் பணி நீக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தை அமுதசுரபி மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இங்கு நகராட்சி மூலம் 9 பேரும், மகளிர் சுய உதவிக்குழுவினர் 9 பேரும் என மொத்தம் 18 பேர் பணியாற்றி வந்தனர். 
இவர்களில் வெற்றிச்செல்வி, தமிழ்ச்செல்வி, கமலா ஆகிய 3 பேரும் நேற்று திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

மண் எண்ணெய் கேனுடன் வந்தனர்

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அவர்கள் 3 பேரும் நேற்று அம்மா உணவகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கப்போவதாக கூறினர்.  இதை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு சென்று 3 பெண் ஊழியர்களையும் சந்தித்து, வேலை கிடைக்க உரிய முயற்சி மேற்கொள்வதாக கூறி சமாதானம் செய்தனர். 
இதுதொடர்பாக பெண் ஊழியர்கள், நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதால் பணி நீக்கம் செய்து உள்ளனர். ஆனால் நாங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் தான் பணியாற்றினோம். எனவே மீண்டும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லை எனில் இங்கேயே தீக்குளிப்போம்’ என்றனர்.

தாசில்தாரிடம் மனு

இதனிடையே அ.தி.மு.க.வினர் 3 பேருக்கும் அம்மா உணவகத்தில் மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி தாசில்தார் ரமாதேவியிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர். 
இந்த விவகாரம் தொடர்பாக வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், ‘அம்மா உணவகம் மகளிர் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அவ்வப்போது ஊழியர்களை மாற்றிக்கொள்வார்கள். 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. இதுதொடர்பாக இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்’ என்றார்.

போலீசார் பேச்சுவார்த்தை

நேற்று காலை 7 மணி அளவில் அம்மா உணவகத்துக்கு வந்த 3 பெண் ஊழியர்களும் பல மணி நேரம் மண்எண்ணெய் கேனுடன் அங்கேயே இருந்ததால் வேதாரண்யத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் 3 ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி அலுவலகத்தில் நாளை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண ஏற்பாடு செய்வதாக போலீசார் கூறினர். அதன்பேரில் 3 பேரும் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறினர். 

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பெண்களுக்கும் மீண்டும் பணி வழங்காவிட்டால் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் அறிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்