ஆனைமலைக்கு தக்காளி அனுப்பி வைப்பு
உடுமலை பகுதியிலிருந்து ஆனைமலைக்கு தக்காளியை அனுப்ப தோட்டக்கலைத்துறை எடுத்த நடவடிக்கை விவசாயிகளை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியிலிருந்து ஆனைமலைக்கு தக்காளியை அனுப்ப தோட்டக்கலைத்துறை எடுத்த நடவடிக்கை விவசாயிகளை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது.
வரத்து அதிகரிப்பு
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு தக்காளி விளைச்சல் அதிக அளவில் இருப்பதால் மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தக்காளி உற்பத்தி அதிகரித்ததாலும், உடுமலை பகுதியில் வரத்து அதிகரித்தாலும் மிகக் குறைந்த விலைக்கே விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பல விவசாயிகள் தக்காளி செடிகளைக் கைவிட்டனர்.சில விவசாயிகள் மாடுகளுக்கு உணவாக அளித்தும், டிராக்டர் விட்டு அழித்தும் பயிர்களை அப்புறப்படுத்தினர்.
கொள்முதல்
ஆனாலும் உடுமலை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் உடுமலை சந்தைக்கு தொடர்ந்து அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உடுமலை மக்களுக்குத் தேவையான தக்காளியை விட பல மடங்கு அதிகமாக உடுமலையில் விளைச்சல் உள்ளது. இதனால் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது என்பது விவசாயிகளின் கவலையாக இருக்கிறது.
இந்தநிலையில் உடுமலை பகுதியில் விளைந்த தக்காளி முதல் கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் ஆனைமலை பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது
உடுமலை பகுதியிலுள்ள விவசாய ஆர்வலர் குழுவிடமிருந்து தக்காளியை தோட்டத்துக்கே நேரடியாக சென்று கொள்முதல் செய்யப்பட்டது.இவை நேரடியாக மக்களுக்கு வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.இதுதவிர அதிகப்படியான 200 பெட்டி தக்காளி ஆனைமலை தோட்டக்கலைத்துறை மூலம் அங்குள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வாங்கிக் கொள்ளப்பட்டது.உடுமலை வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் இதுவரை 155 வண்டிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.