ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள்
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
மேலும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.
இந்த நிலையில், மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் தமிழகத்திற்கு இதுவரை 83 லட்சத்து 39 ஆயிரம் கோவிட்ஷில்டு தடுப்பூசிகளும், 12 லட்சத்து 90 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன.
இதுவரை தமிழகத்தில் சுமார் 73 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 13 சதவீதம் வரை தடுப்பூசிகள் வீணாகியதாக தெரிகிறது. இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தது.
10 பாா்சல்களில் வந்த கோவாக்சின் தடுப்பூசிகளை தேனாம்பேட்டை மாநில அரசின் கிடங்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.