மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை மாநகராட்சி, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை அனைத்தும் இணைந்து புதிய முயற்சி மேற்கொண்டுள்ளோம். 1,600-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் காய்கறிகள் விற்பனை செய்ய, வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரம் எண்ணிக்கையில் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே போடப்படுகிறது. அந்தவகையில் பால் வினியோகம் செய்பவர், பத்திரிகை வினியோகம் செய்பவர், ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், உணவு வினியோகம் செய்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் அமைக்க 18004250111 மற்றும் 9700799993 என்ற எண்களை தொடர்பு கொண்டால், மாநகராட்சி சார்பில் முகாம்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.