கொரோனா தடுப்பூசி கடும் தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி
கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேசமயம் நோய் பரவுவதை தடுக்கும் மற்றொரு ஆயுதமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கோவிசீல்டு, கோேவக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான தொடக்கத்தில் பலரும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன.
தட்டுப்பாடு
கொரோனா தடுப்பூசி பற்றிய தயக்கம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் 2-வது அலையின் பரவல் மின்னல் வேகத்தில் காணப்பட்டதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிகளில் குவிந்தனர். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தடைபட்டன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, காந்திஜிரோட்டில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மட்டும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. அதுவும் ஒருநாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் ஏமாற்றம்
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கோேவக்சின் தடுப்பூசி வராததால் கடந்த ஒரு மாதமாக அந்த தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. ஏற்கனவே முதல் தவணையில் கோேவக்சின் தடுப்பூசி போட்ட பொதுமக்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. தற்போது கோவிசீல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வந்த பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக உள்ள மக்கள் காந்திஜிரோட்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆஸ்பத்திரிக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் படை எடுக்கிறார்கள். அங்கும் தினமும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுவதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். குறிப்பாக 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பல இடங்களுக்கு சென்று அலைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை.
தனி முகாம்
தடுப்பூசி குறைவாக உள்ளதால் தற்போது பணியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசியை தேடி தினமும் வெளியே செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தினமும் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே தடுப்பூசி போடுவதற்காக தனி இடம் தேர்வு செய்து முகாம் அமைக்க வேண்டும். அங்கு முறையாக டோக்கன் வினியோகம் செய்து, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.