குமரி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு கொரோனா

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-05-25 19:03 GMT
நாகர்கோவில்:
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக உள்ளது. அரசு அதிகாரிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று காலை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தினருக்கு பரிசோதனை
மேலும், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதோடு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனின் வாகன டிரைவர் மற்றும் தொடர்பில் இருந்த போலீசாருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்