தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை- ஆலோசனைக்கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தகவல்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அதுல் ஆனந்த் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அரசு முதன்மைச் செயலருமான அதுல் ஆனந்த் தலைமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அதுல் ஆனந்த் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 79 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,030 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 411 படுக்கைகள் உள்ளன.
இங்கு மேலும் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த பணி ஒரு வார காலத்தில் நிறைவு அடையும். மாவட்டத்தில் உள்ள மினி கிளினிக்குகளில் 45 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
தனியார் ஸ்கேன் மையங்கள்
மாவட்டத்தில் தற்காலிக சிகிச்சை மையங்களில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை நடத்தும் தனியார் ஸ்கேன் மையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்,
தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? அந்த நோய்க்கான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், முத்தையன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் அமுதவள்ளி, கண்காணிப்பாளர் சிவக்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.