நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.

Update: 2021-05-25 17:16 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை தலா ரூ.2,000 கடந்த 15-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு, ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. 

இதற்கிடையே கடந்த 23-ந் தேதி காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் 21-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் செயல்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

 ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வந்தனர். மூடப்பட்டு இருப்பதை பார்த்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. 

இதனால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. நடப்பு மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்காமல் இருந்த ரேஷன் அட்டைதாரர்கள் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். ரேஷன் கடை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 3 ரேஷன் கடைகள் இயங்கியது. எல்க்ஹில் ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சேரிங்கிராசில் வரிசையாக உள்ள 3 ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வருபவர்கள் தங்களது ரேஷன் அட்டையை கையில் கொண்டு வருவதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் காண்பித்து வரலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்