தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இளைஞர்கள் ஆர்வம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாம்களில் போட்டி போட்டு கொண்டு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தடுப்பூசி போடும் பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மருத்துவ பணியாளர்கள் 8 ஆயிரத்து 774 பேரும், முன் களப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 334 பேரும், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 32 ஆயிரத்து 83 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 ஆயிரத்து 177 பேரும் ஆக மொத்தம் 77 ஆயிரத்து 368 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 27 ஆயிரத்து 708 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இளைஞர்கள் ஆர்வம்
இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.