பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு 50 ஆயிரம் மலர்களால் உருவான முக கவசம், தடுப்பூசி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்காமல் செடிகளிலேயே மடியும் பூக்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் மலர்களால் கொரோனா விழிப்புணர்வு உருவங்கள் அமைக்கப்பட்டன.

Update: 2021-05-25 15:50 GMT
கொடைக்கானல்:
 ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் என்றவுடன், நம் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடிப்பது அங்குள்ள பிரையண்ட் பூங்கா தான். குளு, குளு சீசனுக்கு சொந்தமான கொடைக்கானலின் இதய பகுதியில் அந்த பூங்கா அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைப்பதில் பிரையண்ட் பூங்காவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் கொடைக்கானலில் நடைபெறும் கோடைவிழாவையொட்டி, இந்த பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 
அப்போது, பூங்காவில் உள்ள செடிகளில் லட்சக்கணக்கான பூக்கள் சிரித்து கொண்டிருக்கும் எழில் மிகு காட்சியில் மனதை பறி கொடுக்காதோர் இருக்க முடியாது. 
செடிகளிலேயே மடியும் பூக்கள்
கொரோனா என்னும் கொடிய அரக்கனால், கடந்த ஆண்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி கொடைக்கானலில் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எழில் கொஞ்சும் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பூஞ்செடிகளை நடவு செய்ய பூங்கா நிர்வாகம் தவறுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்காமல், செடிகளிலேயே பூக்கள் மடிந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமாகவே உள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ரகங்களில் லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டது. தற்போது அவை பூத்துக்குலுங்குகின்றன. 
கொரோனா விழிப்புணர்வு
தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருப்பதால், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு தான் மலர்களால் விருந்து படைக்க முடியவில்லை. அதேநேரத்தில் கொரோனாவை விரட்டும் வகையில் பூக்களால் விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி பூங்காக்களில் பூத்துள்ள பல வண்ணங்களிலான காரனேசன், அஷ்டமேரியா, ஹைட்ரேஜ், சொரிசியாஸ் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் மலர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது பூங்கா வளாகத்தில் முக கவசம், தடுப்பூசி, கொரோனா வைரஸ் போன்ற உருவங்கள் பூக்களால் நேற்று அமைக்கப்பட்டுள்ளன.
எழில்கொஞ்சும் உருவங்கள்
 இதேபோல் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களும் ஆங்கிலத்தில் மலர்களால் எழுதப்பட்டுள்ளது. மனதை மயக்கும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட எழில் கொஞ்சும் இந்த உருவங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பூங்காவில் உருவாக்கப்பட்ட உருவங்களை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மற்றும் பேராசிரியர் முத்துவேல் ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்