கொரோனா தடுப்பூசி
திருப்பூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
முன்களப்பணியாளர்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நீதிமன்ற ஊழியர்கள்
இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முன்கள பணியாளர்கள் உள்ள பகுதிகளில் செவிலியர்கள் சென்று தடுப்பூசியை போட்டனர்.
அதன்படி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவின்பேரில் நீதி துறை சார்பில் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
95 பேருக்கு தடுப்பூசி
நேற்றுகாலை திருப்பூர் மாநகர சுகாதார பிரிவு டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு வந்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கினார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்ட கோர்ட்டு ஊழியர்கள் 61 பேர், இளம் வக்கீல்கள் 34 பேர் என மொத்தம் 95 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
இன்று புதன்கிழமை 300க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை நீதி துறையினர் செய்துள்ளனர்.
---------------
திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.
----
Reporter : M.Sivaraj Location : Tirupur - Tirupur