கூடுதல் விலைக்கு பால்விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பால்விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர்
அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பால்விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நேற்று ஆய்வு செய்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் விஜயகார்த்திகேயன், தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தனது முதல் 5 கையெழுத்தில் ஒன்றாக ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவிட்டார். அதன்படி கடந்த 16ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
பால் பொருட்கள்
ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த விலை குறைப்பு போக மேலும் சிறப்பு சலுகையாக அதிகபட்ச சில்லரை விற்பனை விலையிலிருந்து நீலநிற பாக்கெட் பால் லிட்டர் ரூ.3 வரையிலும், ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு ரூ.2 வரையிலும் விலை குறைப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் தற்போதைய தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காலத்திலும் கள அளவில் பல்வேறு நிலையில் அலுவலர்களை நியமனம் செய்து பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் போதிய அளவில் பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
441 பால் கூட்டுறவு சங்கங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 441 பால் கூட்டுறவு சங்கங்களில் நாளொன்றுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் விற்பனையாக 17 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இணையம் மற்றும் இதர ஒன்றியங்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. மேலும் 90 ஆயிரம் லிட்டர் பால் வெண்மையாகவும் மற்றும் பால் பவுடராகவும் மாற்றம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலை பதப்படுத்தி மக்களுக்கு சரியான முறையில் வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் மற்ற மாநிலங்கள் பாராட்டும் அளவுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு களப்பணிகள் நடந்து வருகிறது. முழு ஊரடங்குக்கு பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நடவடிக்கை
தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால்வரத்து இருந்து வருகிறது. அதில் 28 லட்சம் லிட்டர் பாலை மக்களுக்கு வினியோக செய்து விடுகிறோம். சென்னையில் 12 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காலத்தில் 15 லட்சமாக விற்பனை உயர்ந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாக வருகிறது. அந்த பாலும் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்த 11 கடைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கை அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பால் குளிரூட்டும் நிலையம்
இதை தொடர்ந்து திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதி மற்றும் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள ஆவின் பாலகங்கள், தாராபுரம் அருகே சங்கராண்டாம்பாளையத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டும் நிலையத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை ஆணையாளர் நந்தகோபால், தாராபுரம் சப்கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், பொது மேலாளர்ஆவின் ராஜசேகர், துணை பொது மேலாளர் பழனிசாமி, தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.