நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுக்குள் வராத கொரோனா
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கட்டுக்குள் வரவில்லை.
தேனி:
புரட்டிப்போட்ட 2-வது அலை
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரசின் தாக்கம் அதிகம் இருந்தது. அதைவிடவும் தற்போது 2-வது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த வைரஸ் அதிக வீரியத்தோடு மக்களை தாக்குவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 10-க்கும் குறைவாக இருந்தது.
கடந்த மாதம் பாதிப்பு அதிகரித்தது. ஏப்ரல் மாதம் மட்டும் மாவட்டத்தில் இந்த வைரசால் 2 ஆயிரத்து 891 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த மாதத்தில் இதுவரை 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
கடந்த மாதம் 1-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 56 பேர் சிகிச்சையில் இருந்தனர். ஆனால், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை புரட்டிப் போட்டுள்ளது.
காரணம் என்ன?
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நோய் பரவலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உதவிக்கு உறவினர்கள் தங்குகின்றனர். அவர்கள் உணவு, பால், வெந்நீர் போன்றவற்றை வாங்க வெளியே சென்று வருகின்றனர்.
நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்படும் போது அத்தனை நாட்களாக அவரை மருத்துவமனையில் பராமரித்த உறவினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதில்லை. இதுவும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் இல்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் வாங்கிக் கொடுக்க தன்னார்வலர்கள் போதிய அளவில் இல்லை.
சில உள்ளாட்சி அமைப்புகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் இயல்பாக வெளியே சென்று காய்கறி, பால் போன்றவற்றை வாங்கிக் கொள்கின்றனர்.
பரிசோதனை அலட்சியம்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அவர்களில் பலரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதிகள் இல்லாதவர்கள். அத்தனை பேரையும் அன்றாடம் கண்காணிப்பதில் சிரமம் உள்ளது.
எனவே, கிராமப்புற பகுதிகளில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கம்பம், கூடலூர், உத்தமபாளையம் பகுதிகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானால் போடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட சிகிச்சை மையம் அல்லது தப்புக்குண்டுவுக்கு வர வேண்டியது உள்ளது.
கம்பம், உத்தமபாளையத்திலும் சிகிச்சை மையங்கள் அமைக்கலாம்.
மக்கள் பலர் காய்ச்சல், சளி பாதிப்புக்கு மருத்துவமனைக்கு செல்லாமலும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமலும் மருந்துக்கடைகளில் நேரடியாக மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர்.
குணமாகாவிட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவமனையை தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
எனவே, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கவும், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிக அளவில் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
----