2-வது ஆண்டாக வைகாசி விசாக திருவிழா ரத்து
பழனியில் 2-வது ஆண்டாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பழனி:
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பல்வேறு முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் வைகாசி மாத பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
விசாக திருவிழா ரத்து
கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கின் போது கோவில்கள் அடைக்கப்பட்டதால் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா மட்டும் நடைபெற்றது.
இந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நடத்தப்பட்டிருந்தால் நேற்று முன்தினம் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்று இருக்கும். ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.